Advertisement

‘தி கிராண்ட் மாஸ்டர்’ எப்படி இருக்கு? – திரை விமர்சனம்!

திறமை இருந்தாலும் அதற்கான வாய்ப்பும் வசதியும் இல்லாத ஒருவரின் பயணத்தை சதுரங்கத்தின் பின்னணியில் சொல்லும் படமாக உருவாகியுள்ளது ‘தி கிராண்ட் மாஸ்டர்’. அரசு பள்ளியில் படிக்கும் அஸ்வினுக்கு படிப்பைவிட செஸ் மீது ஆர்வம் அதிகம். அவரது தாயார் அபர்ணதி, துப்புரவு பணியாளராக வேலை செய்து தனது மகனை வக்கீலாக்க வேண்டும் என்ற கனவில் வாழ்கிறார்.

பள்ளி ஆசிரியரின் எதிர்ப்பையும் தாண்டி, போலீஸ் அதிகாரி ஒருவரின் உதவியுடன் சதுரங்கப் போட்டியில் பங்கேற்கும் அஸ்வின் தனது திறமையால் வெற்றி பெறுகிறார். அந்த வெற்றி அவரை கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை நோக்கி நகர்த்துகிறது. ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்க பணமும், பயிற்சியும், வாய்ப்புகளும் தேவைப்படும் நிலையில், அவரது குடும்ப சூழல் பெரிய தடையாக மாறுகிறது.

இதற்கிடையில், சதுரங்க சங்கத் தலைவர் சுரேஷ் மேனனின் எதிர்ப்பும் அஸ்வினின் பயணத்தை சிக்கலாக்குகிறது. அவர் ஏன் அஸ்வினை போட்டிகளில் பங்கேற்க விடாமல் தடுக்கிறார், தாயின் கனவை அஸ்வின் நிறைவேற்றுகிறாரா என்பதுதான் படத்தின் மையக் கதை.

அபர்ணதி தாயாக தனது கதாபாத்திரத்தை இயல்பாக கையாண்டுள்ளார். மகனின் எதிர்காலத்திற்காக போராடும் காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் பெறுகிறது. அஸ்வினாக நடித்துள்ள சிறுவனும் அமைதியான உடல்மொழியுடன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்துள்ளார். பள்ளியில் குப்பைகளை சுத்தம் செய்யும் காட்சி குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. லிங்கேஷ் இயல்பான நடிப்பை வழங்கியுள்ள நிலையில், சுரேஷ் மேனன் எதிர்மறை கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார்.

வெற்றி செழியன் இயக்கியுள்ள இப்படத்தின் சிறப்பு, சதுரங்கத்தை வெறும் விளையாட்டாக காட்டாமல், சமூக ஏற்றத்தாழ்வுகளையும் வாய்ப்புகளுக்கான போராட்டத்தையும் அதன் வழியாக பேச முயன்றிருப்பதுதான். தினேஷ் ஆண்டனியின் இசையும், அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகரின் ஒளிப்பதிவும் படத்திற்கு துணை நிற்கின்றன.

Add a Comment

Leave a Reply