வேலை கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கும் சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீவைஷ்ணவ் கிருஷ்ணா, விஜய் பாலாஜி ஸ்ரீகாந்த் ஆகிய நால்வருக்கும் ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் பணியில் சேரும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், வேலையை சிறப்பாக செய்வதைவிட, வேலை செய்யாமல் எப்படி நாட்களை கடத்துவது என்பதையே அவர்கள் முக்கியமாக நினைக்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது நால்வருக்கும் எதிர்பாராத விதமாக வேலையை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு நடுவே ஒரு கடத்தல் சம்பவமும் அவர்களை சிக்கலில் தள்ளுகிறது. அடுத்தடுத்து உருவாகும் பிரச்சினைகளில் இருந்து இந்த நான்கு நண்பர்களும் எப்படி வெளியே வருகிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
திரில்லர் கதைக்களத்திற்குள் நகைச்சுவையையும் சரியான அளவில் கலந்து படத்தை சுவாரசியமாக நகர்த்தியுள்ளார் இயக்குநர் தம்பிதுரை. சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீவைஷ்ணவ் கிருஷ்ணா, விஜய் பாலாஜி ஸ்ரீகாந்த் ஆகியோரின் இயல்பான நகைச்சுவை கலந்த நடிப்பு படத்திற்கு கலகலப்பை சேர்க்கிறது. நிஷா ஹெக்டே, மேரி லிட்டி, அமிதா ரங்கநாதா, கீர்த்தனா புல்கி ஆகியோரின் பங்களிப்பும் படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.
பெங்களூருவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் காட்சிகளை சரவணனின் ஒளிப்பதிவு சிறப்பாக பதிவு செய்துள்ளது. பிரணவ் கிரிதரனின் இசையும் திரைக்கதையின் பரபரப்புக்கு ஏற்றவாறு பயணிக்கிறது. வேலை செய்யாமல் சம்பளம் வாங்க நினைக்கும் நான்கு நண்பர்களின் குறும்புகளுடன் கடத்தல் சம்பவம் ஏற்படுத்தும் திரில்லரையும் இணைத்து உருவாகியிருக்கும் கலகலப்பான படமாக ‘கோல்ட் கால்’ அமைந்துள்ளது.
—
