2023-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்து வெளியான ‘தசரா’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து நானி – ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‘தி பாரடைஸ்’. எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில், நானி இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது.
அனிருத் இசையமைத்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு தற்போது உறுதி செய்துள்ளது. அதன்படி, ‘தி பாரடைஸ்’ செப்டம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. மேலும், செப்டம்பர் 23-ம் தேதி இரவு படத்தின் சிறப்பு காட்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்துக்கு டிரெய்லர் வெளியிடும் திட்டம் இல்லை என நானி தெரிவித்துள்ளார். டிரெய்லரை தயார் செய்ய மட்டும் 4 முதல் 5 நாட்கள் தேவைப்படும் என்பதால், அந்த நேரத்தை போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். ரசிகர்களுக்கு முடிந்தவரை சிறந்த திரைப்படத்தை வழங்க வேண்டும் என்பதில் படக்குழு முழு கவனத்துடன் இருப்பதாகவும் நானி தெரிவித்துள்ளார்.
