தனது நண்பர் சதானந்தம் மறைவுக்கு வேதனையுடன் இரங்கல் தெரிவித்த இளையராஜா!

தமிழ் திரையிசையில் முன்னணி கிட்டார் கலைஞராக விளங்கிய சதானந்தம் என்ற சதா மாஸ்டர் (79), உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். பழம்பெரும் இசையமைப்பாளர் ஏவிஎம் ஆர். சுதர்சனத்தின் மகனான இவர், பல ஆண்டுகளாக இசைத்துறையில் பணியாற்றி தனக்கென ஓர் இடத்தைப் பெற்றிருந்தார்.

இசையமைப்பாளர் இளையராஜாவுடன் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய சதா மாஸ்டர், பல புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களிலும் பின்னணி இசையிலும் கிட்டார் வாசித்துள்ளார். ‘செந்தூரப்பூவே’ உள்ளிட்ட பாடல்களில் இவரது இசைப் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இளையராஜா மட்டுமின்றி, பிற இசையமைப்பாளர்களின் இசைக்குழுக்களிலும் பணியாற்றியுள்ள இவரது மறைவு, இசைத்துறையினரிடமும் ரசிகர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சதா மாஸ்டரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீண்டகால நண்பரும் தன்னுடன் இணைந்து பணியாற்றியவருமான சதானந்தத்தின் மறைவுச் செய்தி மிகுந்த வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடன் பணியாற்றிய நண்பர்களின் இறுதிச்சடங்குகளுக்கு நேரில் செல்வதில்லை என்பதற்கான காரணத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து இளையராஜா பேசுகையில், “காலமானவர்களை அந்த நிலையில் நான் பார்க்க விரும்பவில்லை. அவர்கள் என்னுடன் உயிருடன் வாழ்ந்தவர்கள், என் உணர்வுடன் கலந்தவர்கள்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பதிவு, சதா மாஸ்டருடனான நீண்டகால நட்பையும் இசைப் பிணைப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply