“பிரபாஸின் குணத்தை கண்டு நெகிழந்தேன்” – நடிகர் ஜிதின் குலாட்டி புகழாரம்!

தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்களில் நடித்து வரும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பிரபாஸ், இந்திய அளவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். தற்போது அவர் ‘ஃபௌசி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் ஜிதின் குலாட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

பிரபாஸுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வரும் அனுபவம் குறித்து ஜிதின் குலாட்டி சமீபத்திய பிரத்யேக பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். பிரபாஸ் மிகவும் தாராளமானவர் என்றும், நல்ல மனிதர் என்றும் அவரைப் பற்றி ஏற்கனவே பலரிடம் கேள்விப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், பிரபாஸுடன் நேரடியாக இணைந்து பணியாற்றத் தொடங்கிய பிறகு, அவரைப் பற்றி கேள்விப்பட்ட அனைத்து விஷயங்களும் உண்மை என்பதை நேரில் அனுபவித்து தெரிந்து கொண்டதாகவும் ஜிதின் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “பிரபாஸ் எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவதற்கு தயாராக இருக்கும் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர். அவர் மிகவும் இனிமையானவர் மற்றும் தாராள மனம் கொண்டவர். யாராவது அவரிடம் உதவி கேட்டால், அவர்களுக்கு உதவுவதற்கு தயங்கமாட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருடன் இணைந்து படப்பிடிப்பில் இருக்கிறேன். அவரைச் சுற்றியுள்ள பலருக்கு அவர் உதவி செய்வதை நேரில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்” என்றார்.

இதனிடையே, பிரபாஸின் எளிமை மற்றும் மற்றவர்களுக்கு உதவும் குணம் குறித்து பேசியதுடன், அவரது வீட்டில் தயாரிக்கப்படும் உணவையும் தான் சாப்பிட்டுள்ளதாக ஜிதின் குலாட்டி தெரிவித்துள்ளார். குறிப்பாக பிரபாஸ் வீட்டில் தயாரிக்கப்படும் மட்டன் குறித்து அவர் கூறுகையில், “பிரபாஸ் வீட்டில் சமைக்கப்படும் உணவுக்கும் ஒரு தனி சிறப்பு இருக்கிறது. அவரது வீட்டில் சமைக்கப்பட்ட உணவை நானும் சாப்பிட்டிருக்கிறேன். அதிலும் குறிப்பாக அங்கு தயாரிக்கப்படும் மட்டன் மிகவும் அருமையாக இருக்கும். நான் இதுவரை சாப்பிட்ட மட்டன்களில் அதுதான் மிகவும் சிறந்தது. இதை நான் பெரிதுபடுத்திக் கூறவில்லை. உண்மையாகவே சாப்பிட்டு அனுபவித்துத்தான் சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

—

Add a Comment

Leave a Reply