‘ரோமான்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய மலையாளப் படங்கள் மூலம் தென்னிந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநர் ஜித்து மாதவன், தற்போது சூர்யா நடிப்பில் ‘சீன்’ என்ற தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார். ழகரம் ஸ்டூடியோஸ் மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சக்தி ஃபிலிம் பேக்டரி வெளியிடும் இப்படம் நவம்பர் 6-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இதற்குப் பிறகு மோகன்லால் நடிக்கும் படத்தை ஜித்து மாதவன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தத் திட்டம் தற்போது கைவிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் மோகன்லால் தனது அடுத்தடுத்த படங்களை இயக்கவுள்ள இயக்குநர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டபோது, அதில் ஜித்து மாதவனின் பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து ‘சீன்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் ஜித்து மாதவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், மோகன்லாலை மனதில் வைத்தே அந்தத் திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியதாகக் கூறினார். பின்னர் அதை வேறொரு நடிகருக்கு ஏற்றவாறு மாற்றுவது சரியாக இருக்காது என்றும் விளக்கினார். மேலும், படப்பிடிப்புக்கு நீண்ட காலம் தேவைப்படுவதால் அதைக் குறைக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் அவ்வாறு செய்வது படத்தின் தரத்தைப் பாதிக்கும் என்பதால் அந்த முயற்சி கைகூடவில்லை என்றும் தெரிவித்தார்.
அந்தப் படத்துக்கு அதிக நாட்கள் தேவைப்படுவதுடன், சண்டைக் காட்சிகளையும் படமாக்க வேண்டியிருப்பதாக ஜித்து மாதவன் குறிப்பிட்டார். தற்போது மோகன்லால் பல படங்களில் பிஸியாக இருப்பதும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படாததற்குக் காரணமாக இருக்கலாம் என்பது தனது புரிதல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
