‘தினந்தோறும்’ திரைப்படத்தை இயக்கிய நாகராஜ், சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது ‘ஆகாயம்’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் ஆலிஷா ஆகியோர் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற கனிகா, இதில் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அக்கா – தம்பி இடையேயான பாசத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைக்கிறார்.
‘ஆகாயம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய கனிகா, “இயக்குநர் நாகராஜ் குறித்து பலரும் பல்வேறு விதமாக என்னிடம் கூறியிருக்கிறார்கள். ஆனால், அவரை நேரில் சந்தித்து பணியாற்றியபோது அவர் மிகவும் அற்புதமான மனிதர் என்பதை தெரிந்துகொண்டேன். நான் பல கதைகளைக் கேட்டு வருகிறேன். சில கதாபாத்திரங்கள் எனக்கு பொருத்தமாக இருந்தால் ஏற்றுக்கொள்கிறேன். சில கேரக்டர்கள் எனக்கு வேண்டாம் என்று தோன்றினால் நானே மறுத்துவிடுவேன்.
ஆனால், ‘ஆகாயம்’ படத்தின் கதையை கேட்டவுடன் இதில் நடிக்க உடனடியாக சம்மதித்துவிட்டேன். கதாபாத்திரத்தை எப்படி அணுக வேண்டும், வசனங்களை எப்படி பேச வேண்டும் என்பது குறித்து இயக்குநர் மிகவும் அழகாக விளக்கிக் கொடுத்தார். இந்தப் படத்தில் வரும் கதையும், கதாபாத்திரங்களும் இயல்பாகவும் உயிரோட்டமாகவும் இருக்கும். குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கக்கூடிய படமாக ‘ஆகாயம்’ இருக்கும் என்று நம்புகிறேன். நாகராஜ் அடுத்து இயக்கும் படத்திலும் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ‘சில்லுனு ஒரு காதல்’ பட இயக்குநர் கிருஷ்ணா, நாகராஜுடனான தனது நீண்டகால நட்பு குறித்தும் பேசினார். அவர் கூறும்போது, “‘மின்னலே’ படத்தில் நான் இணை இயக்குநராக பணியாற்றிய காலத்தில் நாகராஜ் வசனகர்த்தாவாக இருந்தார். அப்போது உருவான எங்களுடைய நட்பு பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அதேபோல், ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட சில முக்கியமான காட்சிகளை நாகராஜ் மேலும் சிறப்பாக மெருகேற்றினார்” என்றார்.
