‘தி பாரடைஸ்’ படத்துக்கு டிரெய்லர் இல்லை… என்ன காரணம்? விளக்கம் கொடுத்த தயாரிப்பாளர்!

பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கயாது லோஹர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஈஸ்வரி ராவ், மோகன் பாபு, சோனல் குல்கர்னி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை உறுதி செய்யும் வகையில் படக்குழு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. இதில் பேசிய நானி, படத்துக்கு டிரெய்லர் வெளியிடப்படாது என்பதை தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சுதாகர் செறுகுரி பேசுகையில், ‘தி பாரடைஸ்’ படத்தின் வெளியீடு குறித்து பல்வேறு வதந்திகள் தொடர்ந்து பரவி வருவதாகவும், ஆனால் திட்டமிட்டபடி செப்டம்பர் 24-ஆம் தேதி படம் வெளியாகும் என்றும் கூறினார். மேலும், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு மிகுந்த திருப்தியையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா, படத்தின் வெளியீட்டில் சிறிய தாமதம் ஏற்பட்டிருந்தாலும், கிளிம்ஸ், டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

‘தி பாரடைஸ்’ திரைப்படம் ஒரு புரட்சிகரமான தாய் – மகன் உறவையும், அவர்களுக்கிடையிலான உணர்வுப்பூர்வமான போராட்டத்தையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் இப்படம் இருக்கும் என்றும் கூறியுள்ளார். “பிறப்பும் இறப்பும் நமக்கானது, ஆனால் வாழ்வு நாட்டுக்கானது” என்ற கலோஜியின் வரிகளை அடிப்படையாகக் கொண்டு, தங்களின் உரிமைக்காக போராடும் மக்களின் வாழ்க்கையை இப்படம் பதிவு செய்கிறது. 2 மணி நேரம் 49 நிமிடங்கள் நீளமுள்ள இந்தப் படத்தின் முழுமையான அனுபவத்தை ரசிகர்கள் திரையரங்கில் நேரடியாக பெற வேண்டும் என்பதற்காகவே டிரெய்லர் வெளியிடாமல் படத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading