கீர்த்தன் நடகௌடா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய தெலுங்கு ஹாரர் திரைப்படம் ‘418’. சூர்யா ராஜ், சரண் லக்கராஜு மற்றும் பிரீத்தி பகடலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை மைத்ரி நிறுவனம் தயாரித்துள்ளது. ‘KGF’ இயக்குனர் பிரசாந்த் நீல் இப்படத்தை வழங்குகிறார். ஹாரர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘418’ படத்தை முதலில் ஜூலை 31-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.
படத்தில் இடம்பெற்றுள்ள ஹாரர் காட்சிகள் அதிகமாக இருப்பதாக சென்சார் தரப்பில் ஆட்சேபனை எழுந்ததாக கூறப்பட்டது. இதனால் படக்குழு ரிவைசிங் கமிட்டியை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டது. ஹாரர் படத்திலேயே ஹாரர் காட்சிகள் அதிகமாக இருப்பதாக சென்சார் பிரச்னை எழுந்த தகவல் வெளியானதும், ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்துடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. சமூக வலைதளங்களில், “ஹாரர் படத்தில் ஹாரர் இருக்கக்கூடாதா?” என்ற கேள்வியுடன் பலரும் கருத்து தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, படத்துக்கு ‘A’ சான்றிதழ் வழங்கி வெளியிட வேண்டும் என்றும் சில ரசிகர்கள் தங்களது கருத்துகளைப் பதிவிட்டனர்.
வழக்கமான பேய் படங்களில் இடம்பெறும் காட்சிகளை விட ‘418’ திரைப்படத்தின் சில காட்சிகள் மிகவும் தீவிரமாகவும், பார்வையாளர்களை அச்சமடையச் செய்யும் வகையிலும் இருப்பதாக சென்சார் தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியானது. இருப்பினும் அந்தக் காட்சிகளின் தீவிரத்தை குறைக்காமல் படத்தின் தன்மையை அப்படியே தக்கவைக்க படக்குழு முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், செப்டம்பர் 10-ஆம் தேதி ‘418’ படத்துக்கு ‘A’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 18-ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள படத்தின் டிரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தை ஈர்த்து வருகிறது.
—
