முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தையும் அவர் நேரில் பார்வையிடுகிறார். இந்நிலையில், அஜித் பங்கேற்கும் கார் ரேஸ் போட்டியை இன்று விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதற்கிடையே, நேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவும் லண்டனில் அஜித்தை சந்தித்ததுடன், அங்குள்ள கார் பந்தயத்திற்கான கட்டமைப்புகளையும் நேரில் பார்வையிட்டார்.

கார் ரேஸ் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த அஜித், முதல்வர் விஜய் லண்டன் வந்திருப்பது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “பரபரப்பான பணிகளுக்கு இடையிலும் எனது அழைப்பை ஏற்று, லீ மான்ஸ் கோப்பை கார் பந்தய தொடரை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் வந்துள்ளார். கடந்த 34 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் திரைத்துறையில் சக நடிகர்களாக இருந்து வருகிறோம். அவர் முதல்வராகியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

விளையாட்டுத் துறையின் வளர்ச்சியில் விஜய் அதிக கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவிலும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகள் வளர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். லண்டனில் நடைபெறுவது போன்று சென்னையிலும் இதுபோன்ற போட்டிகள் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, லண்டனில் அஜித் பங்கேற்கும் கார் ரேஸ் தொடர் இந்திய நேரப்படி இரவு 9:45 மணிக்கு தொடங்கி, இரவு 11:45 மணிக்கு நிறைவடைகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading