அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான ‘டிசி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், படத்தில் லோகேஷை நடிகராக நடிக்க வைத்தது குறித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
லோகேஷ் கனகராஜை ஒரு சாதாரண அறிமுக நடிகராக தன்னால் பார்க்க முடியாது என்றும், அவர் ஏற்கனவே மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றுள்ளவர் என்றும் அருண் தெரிவித்துள்ளார்.மேலும், “முதல் நாளிலிருந்தே ஒரு ஸ்டாரை வைத்து படம் இயக்குகிறோம் என்ற மனநிலையில்தான் இருந்தேன். இந்த கதையை பல ஆண்டுகளாக படமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வைத்திருந்தேன். கதைக்கு ரசிகர்களுக்கு ஓரளவு பரிச்சயமான முகம் தேவைப்பட்ட அதே நேரத்தில், இதற்கு முன்பு பெரிய அளவில் நடிக்காத ஒருவராக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தேன். அப்போதுதான் லோகேஷ் என் நினைவுக்கு வந்தார். அவரை வைத்து படம் அறிவிக்கும்போதே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று கூறியுள்ளார்.
லோகேஷிடம் கதையை சொல்வதற்கு முன்பே அவர் நடிக்கப் போவதாகவும், சில இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வதந்திகள் வெளியாகியிருந்ததாக அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார். இருந்தாலும், இந்தக் கதையை உடனடியாக படமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருநாள் லோகேஷிடம் நேரடியாகச் சென்று, “இந்த மாதிரி ஒரு கதை இருக்கு, பண்றியா?” என்று கேட்டதாகவும், கதை அவருக்கு மிகவும் ப
பிடித்துப்போனதால் உடனடியாக இந்தப் படம் உருவானதாகவும் கூறியுள்ளார். படப்பிடிப்புக்கு லோகேஷ் முழுமையாக ஒரு நடிகராக மட்டுமே வந்ததாகவும், சில நேரங்களில் வசனம் மற்றும் நடிப்பு குறித்து இயல்பாக இருவரும் பேசிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது இயக்குநர் அடையாளத்தை ஒதுக்கி வைத்து, அருண் சொல்வதை உள்வாங்கி நடிக்க வேண்டும் என்ற மனநிலையிலேயே லோகேஷ் இருந்ததால் இருவருக்கும் எந்தவித அழுத்தமும் ஏற்படவில்லை என்றும், அவர்களுக்கிடையே நல்ல புரிதல் இருந்ததாகவும் அருண் குறிப்பிட்டுள்ளார்.
