தமிழ் பேராசிரியராகவும், பட்டிமன்ற பேச்சாளராகவும் மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்த சாலமன் பாப்பையா, 90 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் காலமானார். ‘சிவாஜி’ உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு முதல்வர் விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லண்டனில் இருக்கும் முதல்வர் விஜய், சாலமன் பாப்பையாவின் மறைவு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், பட்டிமன்ற மேடைகள் வாயிலாக தமிழின் சிறப்பையும் தமிழர்களின் வாழ்வியலையும் உலகம் முழுவதும் கொண்டு சென்ற தமிழறிஞரை இழந்தது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை கலந்த பேச்சாற்றலுடன் ஆழமான தமிழறிவையும் இணைத்து, சிக்கலான சமூக சிந்தனைகளையும் எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா என விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். அவரது பங்களிப்பால் பட்டிமன்றங்கள் வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக இல்லாமல், மக்களை சிந்திக்க வைக்கும் அறிவுசார் மேடைகளாகவும் மாறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
