‘திமிரு’, ‘வெயில்’, ‘தோரணை’, ‘வெடி’, ‘அண்டாவ காணோம்’ என பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ள ஸ்ரேயா ரெட்டி, ‘சுழல்’ உள்ளிட்ட வெப் தொடர்களிலும் கவனம் பெற்றுள்ளார். விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்துள்ள இவர், தற்போது பூஜா கொல்லூரு இயக்கும் ‘மாகாளி’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக களரி பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
2024ஆம் ஆண்டு பயிற்சியை தொடங்கிய ஸ்ரேயா ரெட்டி, வாரத்திற்கு 12 முதல் 15 மணி நேரம் வரை களரிக்காக செலவிட்டுள்ளார். ஆரம்பத்தில் திரைப்படத்திற்கான தயாரிப்பாக இருந்த இந்தப் பயிற்சி, பின்னர் அவர் தீவிரமாக கற்றுக்கொள்ளும் கலையாக மாறியுள்ளது. தொடர்ந்து பயிற்சி எடுத்ததன் மூலம் தற்போது களரி கலையில் தேர்ச்சி பெற்ற வீராங்கனையாகவும் தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளார்.
தனது அனுபவத்தை பகிர்ந்துள்ள ஸ்ரேயா ரெட்டி, களரியை கற்றுக்கொள்ளத் தொடங்கிய காலத்தில் அது உடலுக்கும் மனதுக்கும் இடையிலான கடினமான போராட்டமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், ஒவ்வொரு சவாலும் தன்னை வலுப்படுத்தியதுடன், தோல்விகளில் இருந்து மீண்டு நிற்கவும் இந்தக் கலை கற்றுக்கொடுத்ததாக கூறியுள்ளார். இதன் மூலம் தனது உடலும் மனமும் முன்பைவிட வலிமையாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
களரி தனக்கு உடற்பயிற்சி என்ற எல்லையை தாண்டி வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டதாக கூறியுள்ள அவர், இந்த தற்காப்புக் கலையை கற்றுக் கொண்டதை தனது வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்றாக பார்க்கிறார். மேலும், தனது வாழ்க்கையில் எடுத்த மிகச் சிறந்த முடிவுகளில் இதுவும் ஒன்று என்றும் ஸ்ரேயா ரெட்டி தெரிவித்துள்ளார்.
