மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால், தேசிய விருது பெற்ற இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். ‘L367’ என்ற தற்காலிக பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மேப்பாடியான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விஷ்ணு மோகன், அப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை வென்றவர். தொடர்ந்து ‘கதா இன்னுவாரே’ படத்தை இயக்கிய அவர், தற்போது மோகன்லாலை வைத்து இந்தப் புதிய படத்தை இயக்குகிறார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், வழக்கமான ராணுவப் பின்னணியில் நகரும் படமாக இது இருக்காது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘ஆப்ரேஷன் கங்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன்லாலின் வித்தியாசமான கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
