தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நானி, தனது திரைப்பயணத்தில் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த முக்கியமான தருணத்தில் ரசிகர்களின் அன்பை நினைவுகூர்ந்த அவர், சமூக வலைதளப் பதிவு மூலம் தனது நன்றியை தெரிவித்துள்ளார். நானி வெளியிட்ட பதிவில், சினிமாவுக்குள் வந்து இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், “இப்போது சினிமாவில் ஒரு இளைஞராகவே ஆகிவிட்டேன். எப்போதும் உங்களின் அன்பை நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டதில்லை. அப்படி இருக்கவும் மாட்டேன்!” என ரசிகர்களுக்கு உருக்கமாக தெரிவித்துள்ளார்.
2008-ம் ஆண்டு மோகன கிருஷ்ணா இயக்கிய ‘அஷ்டா சம்மா’ படத்தின் மூலம் நானி நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு, கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் உருவான ‘வெப்பம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 2012-ல் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’ அவரை மொழி கடந்து ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நானிக்கு, ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’, ‘தசரா’, ‘ஹாய் நான்னா’, ‘சூர்யாவின் சனிக்கிழமை’, ‘ஹிட் 3’ உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றுத் தந்துள்ளன. அவரது இயல்பான நடிப்பின் காரணமாக ரசிகர்கள் அவரை ‘நேச்சுரல் ஸ்டார்’ என அழைத்து வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் செப்டம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
