‘மெய்யழகன்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்ற இயக்குநர் பிரேம் குமார், அடுத்ததாக பகத் பாசிலை கதாநாயகனாக வைத்து தமிழ் படம் ஒன்றை இயக்கியுள்ளார். பெயரிடப்படாத இப்படத்தில் சிவதா கதாநாயகியாக நடிக்கிறார். இதன் வெளியீடு தொடர்பான தகவலை பகத் பாசில் தற்போது வெளியிட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பகத் பாசில், பிரேம் குமார் இயக்கத்தில் தான் நடித்திருக்கும் இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பிரேம் குமாருடன் அவர் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வரும் நிலையில், இந்தப் படத்திலும் அந்த கூட்டணி தொடர்கிறது. ‘96’, ‘மெய்யழகன்’ என அடுத்தடுத்து வெற்றி பெற்ற படங்களை இயக்கிய பிரேம் குமார், தற்போது பகத் பாசிலுடன் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
