கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டோரதி’. 1990-களின் மதுரையை கதைக்களமாகக் கொண்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து பேசிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ‘டோரதி’ படத்தின் கதையை கொரோனா காலத்திலேயே எழுதியதாக தெரிவித்துள்ளார். அதன்பிறகு வேறு சில படங்களை இயக்கும் பணிகளில் இருந்ததால், இந்தக் கதையை படமாக்குவதற்கு தாமதமானதாக கூறியுள்ளார். மதுரையைச் சேர்ந்த இரண்டு நண்பர்களின் வாழ்க்கையில் கேரளாவில் இருந்து வரும் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் ஏற்படுத்தும் மாற்றங்கள்தான் படத்தின் கதை என அவர் தெரிவித்துள்ளார்.
டோரதி என்ற கதாபாத்திரத்திற்காக சனந்த் தனது உடல் எடையை குறைத்து நீண்ட காலம் காத்திருந்ததாகவும், ரிஷிகாந்தை குறும்படங்கள் நடித்த காலத்தில் இருந்தே தனக்கு தெரியும் என்றும் கார்த்திக் கூறியுள்ளார். கதையை கேட்டவுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்க சம்மதித்ததாகவும், அவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் பெயர் டோரதி என்றும் தெரிவித்துள்ளார். கிரேக்க மொழியில் டோரதி என்ற பெயருக்கு ‘கடவுளின் பரிசு’ என்று அர்த்தம் எனவும் கூறியுள்ளார்.
இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்று குறிப்பிட்ட கார்த்திக் சுப்பராஜ், படப்பிடிப்பின் சில காட்சிகளை முடித்த பிறகு அவற்றை இளையராஜாவிடம் காண்பித்ததாக தெரிவித்துள்ளார். காட்சிகளை பார்த்த அவர், மறுநாள் காலை 8 மணிக்கே ரீ-ரெக்கார்டிங் பணிகளை தொடங்கலாம் என்று கூறியதாகவும், அவருடன் பணியாற்றிய 25 நாட்களும் மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும் பகிர்ந்துள்ளார்.
‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தில் இன்னும் ஒரு பாடல் இருப்பதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 5-ம் தேதி ‘டோரதி’ படத்தின் பின்னணி இசையை மட்டும் தனியாக விழா நடத்தி வெளியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், படத்தின் புரமோஷன் பாடலில் இளையராஜா நடித்தும் பாடியும் இருப்பதாக தெரிவித்துள்ளார். ‘டோரதி’ வெளியான பிறகு இப்படத்தில் நடித்துள்ள பல நடிகர்களும் பிரபலமாவார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்துள்ளார்.
