மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் முக்கியமான காட்சிகளில் சில கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஹவுரா பாலத்தை பின்னணியாகக் கொண்டு நள்ளிரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ளன.
படப்பிடிப்பின்போது மணிரத்னம் நடிகர்களுக்கு காட்சிகளை விளக்கும் புகைப்படங்களும், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்த காட்சிகளின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இருவரும் முதல் முறையாக இணையும் இந்த கூட்டணி தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளன.
இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி என எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கூட்டணி இணைந்துள்ளதால், படத்தின் பெயர் குறித்த அறிவிப்புக்காகவும் ரசிகர்கள் காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்புக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில், புதிய டைட்டில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
