தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பார்வதி திருவொத்து . மலையாளத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள அவர், நடிப்பைத் தாண்டியும் திரைத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு சமூக விவகாரங்கள் குறித்து வெளிப்படையாக தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘அம்மா’ அமைப்பு முன்பு இருந்த அளவிற்கு தற்போது தீவிரமாக செயல்படும் அமைப்பாக பார்க்கப்படுவதில்லை என பார்வதி திருவோத்து தெரிவித்துள்ளார். திரைப்பட கலைஞர்கள் அனைவருக்கும் பாதுகாப்பையும், ஆதரவையும் வழங்கக்கூடிய மிகப்பெரிய குடும்பமாக இந்த அமைப்பு தன்னை முன்னிறுத்திக் கொண்டிருந்தாலும், அந்த எண்ணம் நடைமுறையில் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நீண்ட காலமாக ஒரு பொறுப்பில் இருந்தவர்களின் அனுபவத்துடன் புதிதாக பொறுப்புக்கு வந்தவர்களை ஒப்பிட்டு, அவர்கள் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே அவர்களது செயல்பாடுகள் மற்றும் திறமையை மதிப்பிடுவது எந்த வகையில் சரியாக இருக்கும் என்றும் பார்வதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது பார்வையில் ‘அம்மா’ அமைப்பு அனைவருக்கும் தேவையான பாதுகாப்பு, ஆதரவு மற்றும் மரியாதையை வழங்கக்கூடிய இடமாக தற்போது தெரியவில்லை எனவும் பார்வதி கூறியுள்ளார். எந்தவொரு அமைப்பின் ஆதரவும் இல்லாமலேயே தான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வதால், தற்போதைய சூழலில் தனக்கு எந்த அமைப்பிலும் இடம்பெற வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அமைப்புகள் குறித்த விவாதங்களில் இருந்து விலகி, இனி தனது திரைப்படப் பணிகளில் அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும் பார்வதி குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் ‘பிரதம திருஷ்டிய குட்டக்கார்’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது?,
