அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘தர்மன்’. இந்தப் படத்தில் சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ‘சிவாஜி’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகை ஸ்ரேயாவும் ரஜினிகாந்துடன் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு பிரபல நடிகைகள் சிறப்பு நடனம் ஆடுவது சமீபகாலமாக வழக்கமாகி வருகிறது. அந்த வகையில், ‘தர்மன்’ திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு எந்த நடிகை நடனமாட உள்ளார் என்பது தற்போது வரை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் தமன்னா சிறப்பு நடனம் ஆடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ படத்தில் பூர்ணா மற்றும் நேரா பதேஹி நடனமாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், ‘கூலி’ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே சிறப்பு நடனத்தில் இடம்பெற்றார். இந்த வரிசையில் தற்போது ‘தர்மன்’ திரைப்படத்தின் பாடலுக்காக நடிகை கயாடு லோஹரை அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
