Advertisement

‘வாரணாசி’ படத்திற்காக மிகப்பெரிய முயற்சியை எடுக்கும் இயக்குனர் ராஜமௌலி!

உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ள ‘வாரணாசி’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளிலும் இயக்குநர் ராஜமவுலி தனித்துவமான அணுகுமுறையை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளார். தற்போது ஏஐ மூலம் உருவாக்கப்படும் குரல்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தவிர்த்து சுமார் 50 மொழிகளில் இப்படத்திற்கான டப்பிங்கை உண்மையான குரல் கலைஞர்களை வைத்து மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு மொழிக்கும் கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ற குரல்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிக்காக ராஜமவுலியின் குழு மிகப்பெரிய அளவில் குரல் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 1,500 குரல் கலைஞர்களிடம் ஆடிஷன் நடத்தப்பட்டு, படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான குரல்களைத் தேர்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இப்படம் வெளியாக உள்ளதால், இத்தனை மொழிகளுக்கான டப்பிங் பணியை ஒருங்கிணைப்பது படக்குழுவுக்கு முக்கியமான சவாலாக மாறியுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு பணிகளே இன்னும் தொடர்ந்து வரும் சூழலில், பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்வதற்கும் கணிசமான கால அவகாசம் தேவைப்படும். இருந்தாலும் மொழி மாறினாலும் கதாபாத்திரங்களின் உணர்வு, நடிப்பு மற்றும் பாவனைகளின் தாக்கம் குறையக் கூடாது என்பதில் ராஜமவுலி கவனம் செலுத்தி வருகிறார். சுமார் ரூ.1,400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். உலகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் 2027-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply