ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘நிஞ்சா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ரொமாண்டிக் காமெடி பாணியில் குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் உருவாகும் இப்படத்தை முருகு இயக்குகிறார். படத்தின் பூஜை நிகழ்ச்சி மற்றும் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று தஞ்சாவூரில் தொடங்கியது. முதற்கட்டமாக 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
கதாநாயகியாக பிரார்த்தனா நடிக்கிறார். இவர் ‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘லவ் டுடே’, ‘பார்க்கிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர். தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ படத்தை தயாரித்த கே.எஸ். சினிஷ், தற்போது அர்ஜுன் தாஸ் மற்றும் சாண்டி நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ என்ற மற்றொரு படத்தையும் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார்.
‘நிஞ்சா’ படத்தில் ஜென்சன் திவாகர், ராதாரவி, தீபா ராமானுஜம், தேவதர்ஷினி, கல்யாணி நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் காதல் மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளன.
