பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: முதல்வர் விஜய்க்கு இயக்குனர் & நடிகர் சித்ரா லட்சுமணன் நன்றி!

பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு இயக்குனர் மற்றும் நடிகர் சித்ரா லட்சுமணனின் இதயபூர்வமான நன்றிகள்!

இயக்குநர் இமயம் பாரதிராஜா உதவி இயக்குநராக இருந்த காலகட்டத்தில் இருந்தே அவரோடு பழகுகின்ற அரிய வாய்ப்பைப் பெற்றவன் நான்.தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய திரைச் சிற்பியான பாரதிராஜாவை, ஒரு திரைப்பட இயக்குநர் என்ற வட்டத்திற்குள் மட்டும் அடக்கிவிட முடியாது என்பதுதான் உண்மை.

சமூக நீதிக் கருத்துகளைத் தனது திரைப்படங்கள் மூலம் எடுத்துச் சொன்னது மட்டுமின்றி, தமிழ் சமூகத்திற்குப் பிரச்சினைகள் ஏற்பட்டபோதெல்லாம் களத்தில் இறங்கிப் போராடிய ஒரு போராளியாகவும் வாழ்ந்து மறைந்தவர் பாரதிராஜா.

அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக வத்தலகுண்டுக்கு அருகிலுள்ள அந்த இடத்தில் திரண்டார்கள் என்றால், அதற்குக் காரணம் மக்களுக்கான திரைப்படங்களை அவர் தந்தவர் என்பதால் மட்டும் அல்ல; மக்களுக்கான பல்வேறு போராட்டங்களில் அவர் நேரடியாகப் பங்கேற்றவர் என்பதும் மிக முக்கியமான காரணம்.

திரைத்துறையிலும் தனது வாழ்க்கையிலும் அவர் நிகழ்த்திய சாதனைகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில், ரூ.2.5 கோடி செலவில் தேனியில் பாரதிராஜாவின் திருவுருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களுக்கும், செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரதிராஜாவுடன் ஒரு நண்பனாக 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்தவன் என்ற முறையிலும், 23 திரைப்படங்களில் அவருடன் உதவி இயக்குநராகப் பணியாற்றியவன் என்ற முறையிலும், இந்த அறிவிப்பு எனக்கு மிகுந்த மனநிறைவையும் நெகிழ்ச்சியையும் அளிக்கிறது.

பாரதிராஜாவின் கலைப் பயணத்தையும், தமிழ் சினிமாவிற்கும் தமிழ் சமூகத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பையும் வருங்காலத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் நினைவுச் சின்னமாக இந்த மணிமண்டபம் திகழும்

இந்தச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கும், செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை என் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். – நடிகர் & இயக்குனர் சித்ரா லட்சுமணன்

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading