நடிகர் தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘தமிழ் முருகன்’ படத்திலும் நடிக்க உள்ளார். சினிமாவில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் நிலையில், தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுகளும் அவ்வப்போது எழுந்து வருகின்றன.
கடந்த மாதம் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தனுஷ் கலந்துகொண்டார். அப்போது ரசிகர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்றும், நலத்திட்டப் பணிகளில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அவர், தன்னை இன்னும் வேகமாக செயல்பட வைப்பவர்கள் அவர்கள்தான் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தனுஷின் இந்தப் பேச்சு அவரது அரசியல் நகர்வுக்கான மறைமுக அறிகுறியாக இருக்கலாம் என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. மேலும், ரசிகர் மன்றம் சார்பில் வைக்கப்பட்டிருந்த சில போஸ்டர்களில் ‘தலைவர் தனுஷ்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்ததும் கவனம் பெற்றது. இதற்கிடையே, தனது நற்பணி மன்றத்தின் வாயிலாக தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள தனுஷ் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழலில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷிடம் தனுஷ் அரசியலுக்கு வந்தால் அவருக்கு ஆதரவு அளிப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “என் நண்பர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் என் ஆதரவு அவருக்கு இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘மயக்கம் என்ன’, ‘அசுரன்’ உள்ளிட்ட படங்களுக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
—
