சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தனது ரசிகர்கள் குறித்தும், அவர்களுடனான தனது நீண்டகால பயணம் குறித்தும் சிவகார்த்திகேயன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தபோது ரசிகர்கள் சிலர் தன்னை சந்திக்க படப்பிடிப்பு தளத்திற்கு வந்த சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார். அப்போது தயாரிப்பாளர் ஒருவர், “இவர்களெல்லாம் ஆரம்பகாலத்தில் இருக்கும் கிரேஸால் வருகிறார்கள். சில காலத்துக்குப் பிறகு இருக்க மாட்டார்கள்” என்று கூறியதாக தெரிவித்தார். ஆனால், அந்த கருத்தை ஏற்காத சிவகார்த்திகேயன், ரசிகர்கள் தன்னுடன் தொடர்ந்து பயணிப்பார்கள் என்றும், கடைசி வரை ஆதரவாக இருப்பார்கள் என்றும் அப்போதே நம்பிக்கையுடன் கூறியதாக தெரிவித்தார். அதற்கு அந்த தயாரிப்பாளர், “அவர்கள் இருப்பார்கள்… ஆனால் நீங்கள் இந்த இண்டஸ்ட்ரியில் இருப்பீர்களா?” என்று கேட்டதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக நற்பணி இயக்கத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் சந்திப்பையும் நடத்தி வருவதாக கூறினார். இதனால் இந்த நிகழ்வு திடீரென தொடங்கப்பட்ட ஒன்று அல்ல என்றும் அவர் விளக்கினார். மேலும், இனி தனது சினிமா பயணத்தில் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் மாஸ் கமர்ஷியல் மற்றும் பொழுதுபோக்கு படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே, சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘சேயோன்’ படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல் SK27 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சண்டைக் காட்சியுடன் தொடங்கியுள்ளதாகவும், தற்போது நடனக் காட்சிக்கான படப்பிடிப்பும் நடைபெற்று வருவதாகவும் கூறி ரசிகர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்களை வழங்கியுள்ளார்.
