ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராம் & லீலா’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சேத்தன், தீபா வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகையும் பிரபல டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
தனது கம்பேக் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய தீபா வெங்கட், பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்க வருவதால் அறிமுகமானவர்கள் மட்டுமின்றி, தன்னை அறியாதவர்களிடமிருந்தும் வாழ்த்துகள் கிடைப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இடைப்பட்ட காலத்தில் சீரியல், திரைப்படங்கள், வெப் சீரிஸ் என பல வாய்ப்புகள் தன்னைத் தேடி வந்ததாகவும், ஆனால் அந்தந்த நேரத்தில் இருந்த தனது மனநிலையே அவற்றைத் தேர்வு செய்யும் முடிவை தீர்மானித்ததாகவும் கூறியுள்ளார்.
அந்த வகையில் ‘ராம் & லீலா’ கதையை இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் விவரித்தபோது, அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வம் தனக்குள் ஏற்பட்டதாகவும், இந்தப் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்திலேயே வாய்ப்பை ஏற்றுக்கொண்டதாகவும் தீபா தெரிவித்துள்ளார்.
