இயக்குநர் அட்லீ தனது நிறம் மற்றும் தோற்றத்தை வைத்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ‘பத்தா’ படத்தின் வெற்றி விழாவில் பதிலளித்துள்ளார். சினிமாவில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது குறித்து பேசிய அவர், தன்னுடைய அடையாளத்தைப் பற்றி வெளிப்படையாகக் கூறியுள்ளார். “நான் கருப்புதான். இதை நான் பெருமைக்காகச் சொல்லவில்லை. என்னுடைய தோற்றத்தையும் நிறத்தையும் வைத்து என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு என்னோட பதில்.. என்னோட படம் தான். இது என்னுடைய அடையாளம்” என அட்லீ தெரிவித்துள்ளார்.
தனது திரைப்பயணத்தில் கடினமான காலங்களை கடந்து வந்தது குறித்தும் பேசிய அவர், அப்போது தொழிலதிபர் ஆனந்த் அம்பானி தனக்கு பக்கபலமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். தான் போராடிக் கொண்டிருந்த காலத்தில் உறுதுணையாக நின்றவர் ஆனந்த் அம்பானி மட்டுமே எனக் கூறிய அட்லீ, உண்மையான நட்புக்கு ஒருவரின் நிறமோ தோற்றமோ தடையாக இருக்காது என்பதையும் தனது அனுபவத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
அட்லீயின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக நிறம் மற்றும் தோற்றத்தை வைத்து ஒருவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதற்கு எதிராக அவர் வெளிப்படையாக பேசியதற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
