Advertisement

‘ஏ ஓ டி’ திரைப்படம் எப்படி இருக்கு? -திரை விமர்சனம்!

வசதிகளற்ற கிராமத்தில் பிறந்த ஒரு சிறுமி, விண்வெளி வீரராக வேண்டும் என்ற தனது கனவை எப்படித் துரத்துகிறாள் என்பதை உணர்வுபூர்வமாகச் சொல்லும் படமாக உருவாகியுள்ளது ‘ஏ ஓ டி’. அறிவியல் பின்னணியில் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் இணைத்துள்ள இயக்குநர் சதினேனியின் இந்த முயற்சி, வழக்கமான கதைகளிலிருந்து வித்தியாசப்படுகிறது.

சாத்விகா நடித்துள்ள கல்பனா, பள்ளியில் நாசர் நடத்தும் விண்வெளி தொடர்பான வகுப்பால் ஈர்க்கப்பட்டு விண்வெளி வீரராக ஆசைப்படுகிறாள். ஆனால், குடும்பச் சூழலும் குடிகாரத் தந்தையின் கட்டாயத் திருமண முடிவும் அவளது கனவுக்குத் தடையாகின்றன. துல்கர் சல்மான் நடிக்கும் கிருஷ்ணாவைத் திருமணம் செய்துகொள்ளும் கல்பனையின் லட்சியம் அத்துடன் முடிந்துவிடுகிறதா அல்லது அவள் அதை அடைகிறாளா என்பதே படத்தின் பயணம்.

கல்பனாவாக நடித்துள்ள சாத்விகா, சிறுமியின் ஆர்வம் முதல் பல அவமானங்களையும் தடைகளையும் எதிர்கொள்ளும் பெண்ணின் போராட்டம் வரை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, விண்வெளி வீரராக வேண்டும் என்ற உறுதியை படம் முழுவதும் தக்கவைத்திருக்கும் அவரது நடிப்பு பாராட்டுக்குரியது.

கட்டாயத் திருமணத்தின் பின்னணியை அறிந்த பிறகு மனைவியின் கனவுக்கு ஆதரவாக நிற்கும் கிருஷ்ணாவாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். மனைவிக்காக நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளியாக உழைப்பது உள்ளிட்ட காட்சிகளில் அவரது நடிப்பு உணர்வுபூர்வமாக அமைந்துள்ளது. நாசர், சின்னி ஜெயந்த், கௌதம் வாசுதேவ் மேனன், ருஹானி சர்மா, முரளி சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர். விண்வெளி நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணாக வரும் ஸ்ருதிஹாசன் தனது துடிப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.

அறிவியல் மீதான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒரு பெண்ணின் கனவைச் சொல்வது படத்தின் முக்கியமான பலம். ராக்கெட் உருவாக்கம், குஜராத்தின் நிலக்கரிச் சுரங்கப் பகுதிகள் எனப் பல காட்சிகளைச் சுவாரசியமாகப் படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங். ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசையும் படத்திற்கு வலுசேர்க்கிறது.

அதேவேளையில், கிருஷ்ணா தனது மனைவிக்காக இவ்வளவு பெரிய முடிவுகளை எடுப்பதற்கான காரணங்கள் சில இடங்களில் முழுமையாக நிறுவப்படவில்லை. அவரது திருமணம் குறித்த அறியாமை, அமெரிக்க நிறுவனம் கதைக்குள் நுழையும் விதம் போன்றவை சில கேள்விகளை எழுப்புகின்றன. மனைவி விண்வெளிக்குச் செல்வது குறித்த அவரது அச்சமும் இன்னும் ஆழமாகக் கையாளப்பட்டிருக்கலாம். நேரடி தெலுங்குப் படத்தின் சில தொடக்கக் காட்சிகளில் உதட்டு அசைவுகள் தமிழுக்கு முழுமையாகப் பொருந்தவில்லை. சில திரைக்கதை குறைகள் இருந்தாலும், சாதாரணப் பெண்ணின் அசாதாரணக் கனவை அறிவியல் பின்னணியில் ரசிக்கும்படி சொல்லியிருக்கும் ‘ஏ ஓ டி’ கவனிக்கத்தக்க படமாக அமைந்துள்ளது.

Add a Comment

Leave a Reply