‘ஹனு-மேன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதே சினிமா உலகில் மற்றொரு பிரம்மாண்டமான ஃபேன்டஸி படத்தை உருவாக்குகிறது பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட். ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் இளம் நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் டைட்டில் போஸ்டரையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வெளியாகியுள்ள போஸ்டரில், மேகங்களுக்கு நடுவே அனுமனின் பிரம்மாண்டமான தெய்வீக உருவம் காட்சியளிக்கிறது. காவி உடையில் நிற்கும் வைஷ்ணவ் தேஜை, வானத்திலிருந்து இறங்கும் பிரம்மாண்ட வானரத்தின் வால் மேலே தூக்குவது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது.
புராணம் மற்றும் கற்பனைக் கூறுகளை இணைத்து பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் நோக்கில் இப்படம் உருவாகிறது. பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி ஆகியோர் தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ரிஷப் ஷெட்டி நடிக்கும் ‘ஜெய் ஹனுமான்’ படமும் உருவாகி வருகிறது. ‘ஹனு-மேன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமே மற்றொரு புதிய கதையுலகத்தை உருவாக்க முனைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
