வாலிபால் கதைக்களத்தில் உருவாகும் முதல் தமிழ் படம்.. பவிஷின் ‘அட்டாக்கர்’!

தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பவிஷ். தனுஷின் உறவினரான இவர், அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்த படங்களுக்கான கதைகளை கேட்டு வந்தார். அந்த வகையில், பா. இரஞ்சித்தின் முன்னாள் இணை இயக்குநரான தாமோ நாகபூஷ்ணம் இயக்கும் ‘அட்டாக்கர்’ திரைப்படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.

பவிஷ் நடிக்கும் இப்படத்தை சினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தினேஷ் ராஜ் தயாரிக்கிறார். இந்நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் இப்படம், வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் முதல் தமிழ் திரைப்படம் என்ற சிறப்பைப் பெறுகிறது. விளையாட்டை மட்டும் மையப்படுத்தாமல், அதனுடன் தொடர்புடைய மனித உணர்வுகள், சமூகச் சூழல் மற்றும் கலாச்சார அடையாளங்களுக்கும் படத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் நடிகை அவந்திகா சுந்தர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை குஷ்பு சுந்தர் மற்றும் இயக்குநர்-நடிகர் சுந்தர் சி. ஆகியோரின் மகளான அவந்திகா, ‘அட்டாக்கர்’ மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், படத்திற்கு இயல்புத்தன்மையை கொண்டு வரும் வகையில் இந்தியாவின் முன்னணி வாலிபால் வீரர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பவிஷின் பிறந்தநாளை முன்னிட்டு ‘அட்டாக்கர்’ படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. புதிய கதைக்களம் மற்றும் வித்தியாசமான விளையாட்டுப் பின்னணியில் உருவாகி வரும் இப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading