மோசமான விமர்சனம் மூலம் ரூ.20 கோடி வசூல்… சீனாவில் கலக்கும் ‘நியூ லாய்’!

சீனாவில் வெறும் ரூ.1 லட்சம் பட்ஜெட்டில் உருவான அனிமேஷன் திரைப்படமான ‘நியூ லாய்’ தற்போது எதிர்பாராத வகையில் பாக்ஸ் ஆபிஸில் கவனம் ஈர்த்து வருகிறது. Xin Yumeng மற்றும் Sun Lifang ஆகிய இருவர் இணைந்து உருவாக்கிய இப்படம், ஆகஸ்ட் 5ம் தேதி சீனாவில் வெளியானபோது தொடக்கத்தில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. முதல் 10 நாட்களில் 300க்கும் குறைவான பார்வையாளர்களே படத்திற்கான டிக்கெட்டுகளை வாங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால், படத்தின் காட்சியமைப்பு, கதாபாத்திரங்களின் அனிமேஷன் மற்றும் குரல் பதிவு உள்ளிட்ட அம்சங்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. சிலர் படத்தை மிகவும் மோசமானது என்றும், ஏஐ உருவாக்கிய படைப்புகளைவிட மோசமாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர். இந்த எதிர்மறை விமர்சனங்களே பின்னர் ‘நியூ லாய்’ படத்திற்கு எதிர்பாராத விளம்பரமாக மாறின.

குறிப்பாக, படத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் மீம்களாகவும், வீடியோக்களாகவும் வைரலாகத் தொடங்கின. இதனால், படம் உண்மையிலேயே இவ்வளவு மோசமாக இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே உருவானது. இதன் காரணமாக படத்தை திரையரங்குகளில் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் திடீரென அதிகரிக்கத் தொடங்கியது.

சீன பாக்ஸ் ஆபிஸ் தரவுகளின்படி, தற்போது ‘நியூ லாய்’ திரைப்படம் 14.9 மில்லியன் யுவானுக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும், இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.20 கோடி எனவும் கூறப்படுகிறது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவான திரைப்படம் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வசூலை நோக்கி நகர்வது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இதற்கிடையே, சீன பாக்ஸ் ஆபிஸில் ‘நியூ லாய்’ திரைப்படம் பெரிய ஹாலிவுட் படங்களான ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ மற்றும் கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’ ஆகியவற்றுடன் போட்டியிட்டு வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading