குழந்தைகள் கொண்டாடிய காட்சிகள்.. நெகிழ்ந்த மமிதா பைஜூ!

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் நான்கு நாட்களில் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் நடிகை மமிதா பைஜூ கலந்து கொண்டு பேசினார். திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், படத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்ததற்கும், அதன் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும் உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்தார்.

இதுவரை படத்தை திரையரங்குகளில் பார்க்காதவர்கள் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட மமிதா, படம் முடிந்து திரையரங்கைவிட்டு வெளியே வரும்போது மனதிற்குள் ஒரு நிறைவு கிடைக்கும் என்றார். படத்தைப் பார்த்து பலரும் பாராட்டியிருப்பதாகவும், அதன் மூலம் தனக்கு ஏராளமான மறக்க முடியாத நினைவுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தன்னை மிகவும் நெகிழ வைத்த சம்பவத்தையும் பகிர்ந்த மமிதா, சிறு குழந்தைகள் திரையரங்குகளில் ‘பட்டாம்பூச்சி’ பாடல் மற்றும் தனது நகைச்சுவைக் காட்சிகள் வரும்போது சிரித்து மகிழ்ந்த வீடியோக்களை பார்த்ததாக கூறினார். அவர்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கொண்டாடியதைப் பார்த்தபோது, தனது சிறுவயது நினைவுகள் அனைத்தும் நினைவுக்கு வந்ததாக தெரிவித்தார்.

சிறுவயதில் தானும் திரையரங்குகளுக்குச் சென்று பிடித்த திரைப்படங்களையும் கதாபாத்திரங்களையும் பார்த்து உற்சாகமாக கொண்டாடியதாக கூறிய மமிதா, தற்போது குழந்தைகள் தனது படத்தை அதே உற்சாகத்துடன் கொண்டாடுவதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டதாக நெகிழ்ந்தார். அந்த உணர்வை வார்த்தைகளால் முழுமையாக விவரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading