தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து படத்தின் நிலவரம் என்ன? வெளியான புது தகவல்!

தனுஷ் மற்றும் ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இணையும் புதிய திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை வரும் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் தனுஷ், தற்போது ‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் ‘தமிழ் முருகன்’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் என அவரது அடுத்தடுத்த படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த வரிசையில், ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற தமிழரசன் பச்சமுத்துவின் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மிணி வசந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ‘உறியடி’ படத்தின் மூலம் பிரபலமான விஜயகுமார் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் இசையமைப்புப் பொறுப்பை அனிருத் ஏற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனுஷ், தமிழரசன் பச்சமுத்து, அனிருத் ஆகியோரின் கூட்டணி மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்திற்கான ப்ரீ-புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும், செப்டம்பர் மாத இறுதியில் படத்தின் பூஜை நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading