சமீபத்தில் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பில் தனது திரைப்பயணம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், சினிமா பின்னணி இல்லாமல் தானும் விஜய் சேதுபதியும் முன்னேறியதாக குறிப்பிட்டார். மிமிக்ரி கலைஞர் தொகுப்பாளர் சினிமாவில் வெற்றி பெற முடியாது என சிலர் கூறியபோதும், நடிகராக தன்னை நிரூபித்ததாக அவர் தெரிவித்தார். விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றும், ஆனால் தங்களது நோக்கம் என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் ரசிகர்களிடம் கூறினார்.
மேலும், தினமும் புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும், தொடர்ந்து வாசிப்பது அறிவையும் சிந்தனையையும் மேம்படுத்துவதுடன், சமூக வலைத்தளங்களில் செலவிடும் நேரத்தை குறைக்கவும் உதவும் என்றார். நன்றாகப் படியுங்கள், நன்றாக சம்பாதியுங்கள்” என கூறிய அவர், குடும்பத்திற்கே முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்களிடம் வலியுறுத்தினார்.
தனது அடுத்தடுத்த படங்கள் குறித்தும் பேசிய சிவகார்த்திகேயன், ‘சேயோன்’ படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். ரசிகர்கள் விரும்பும் வகையில் இப்படம் சிறந்த பொழுதுபோக்கு படமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
