பேஷன் மீதான தனது ஆர்வம், சினிமாவில் ஏற்க விரும்பும் கதாபாத்திரம், ஓய்வு நேர செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நடிகை கிருத்தி ஷெட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் இளம் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், தனது தனிப்பட்ட ரசனைகள் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
சிறு வயதிலேயே ஆடை வடிவமைப்பு மீதான ஆர்வம் தனக்கு ஏற்பட்டதற்கு தனது தாயாரே முக்கிய காரணம் என்று கிருத்தி தெரிவித்துள்ளார். அவரது தாயார் ஆடை வடிவமைப்பாளராக இருப்பதால், பேஷன் மற்றும் ஆடைகள் தொடர்பான விஷயங்கள் தனது வாழ்க்கையில் எப்போதும் முக்கிய இடம் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். குறிப்பாக புடவைகள் மீது தனக்கு அதிக விருப்பம் இருப்பதாகவும், தனது அம்மாவின் புடவைகள் மற்றும் நகைகளை வாங்கி அணிந்து மகிழ்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திரையில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்பதையும் கிருத்தி வெளிப்படுத்தியுள்ளார். போர்க்கள வீராங்கனை அல்லது இளவரசி போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்டநாள் கனவு எனக் கூறியுள்ள அவர், ‘பாகுபலி’ திரைப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி நடித்த தேவசேனா கதாபாத்திரம் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார். அந்த கதாபாத்திரத்தைப் போன்ற கம்பீரமான வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறியுள்ளார்.
படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரங்களில் தனது நான்கு மாத நாய்க்குட்டியுடன் அதிக நேரத்தை செலவிடுவதாக கிருத்தி தெரிவித்துள்ளார். இதனுடன் நடனம் மற்றும் தற்காப்புக் கலைகள் மீதும் தனக்கு ஆர்வம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி ஆகிய நடனங்களை ஏற்கெனவே கற்றுக்கொண்டுள்ள அவர், தற்போது கதகளியையும் பயின்று வருவதாக தெரிவித்துள்ளார்.
தனக்கு பிடித்த நடிகைகள் குறித்து பேசியபோது, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் படங்களை எப்போதும் விரும்பிப் பார்ப்பதாக கிருத்தி கூறியுள்ளார். அவரது இயல்பான மற்றும் சிறப்பான நடிப்பை மிகவும் ரசிப்பதாகவும், திரையுலகில் அவருக்கு நிகர் யாரும் இல்லை என தான் உண்மையாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நடிகை மாதுரி தீட்சித்தையும் தான் மிகவும் வியந்து போற்றும் மற்றொரு சிறந்த நடிகையாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
—
