சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவிதேஜா நடிக்கும் ‘இருமுடி’ திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தில், காவேரி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். அம்மா மற்றும் மனைவி என குடும்பத்தின் முக்கிய பொறுப்புகளை ஏற்கும் பெண்ணாக இப்படத்தில் தோன்றும் இந்த கதாபாத்திரம் தனக்கு மிகவும் நெருக்கமானது என பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
படத்தின் கதையை முதன்முதலில் கேட்டபோதே இயக்குநர் சிவா நிர்வாணா உருவாக்கியிருந்த உணர்வுப்பூர்வமான உலகத்தை தன்னால் உணர முடிந்ததாக அவர் கூறியுள்ளார். நேர்மையானதும் வலிமையானதுமான கதைக்களத்தில் ஒரு பகுதியாக இணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ‘இருமுடி’யில் இடம்பெறும் உறவுகள் அன்பும் உணர்ச்சியும் நிறைந்ததாக இருப்பதால் காவேரி கதாபாத்திரம் தனக்கு மிகவும் சிறப்பானதாக மாறியதாக தெரிவித்துள்ளார்.
ரவிதேஜாவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அனைவரிடமும் மிகவும் அன்பாகவும் இயல்பாகவும் பழகிய ரவிதேஜா, படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் வசதியான சூழலை உருவாக்கியதாக கூறியுள்ளார். இதனால் அவருடன் இணைந்து நடிப்பது எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததாக பிரியா தெரிவித்துள்ளார். கதாபாத்திரங்களின் உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதில் சிவா நிர்வாணா தெளிவாக இருந்ததாகவும், அவரது வழிகாட்டுதலில் பணியாற்றியது அழகான அனுபவமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
படப்பிடிப்பு நிறைவடைந்தபோது, திரைப்படத்தைத் தாண்டி ஏராளமான நினைவுகளையும் அனுபவங்களையும் தாங்கள் எடுத்துச் சென்றதை உணர்ந்ததாக பிரியா தெரிவித்துள்ளார். பல காட்சிகளில் இணைந்து நடித்ததுடன், தங்களுக்குள் மட்டுமே புரியும் நகைச்சுவையான தருணங்களை பகிர்ந்து கொண்டு நிறைய சிரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தங்களுடன் பணியாற்றும் மனிதர்களே பின்னர் வாழ்க்கையில் எடுத்துச் செல்லும் நினைவுகளின் முக்கியமான பகுதியாக மாறிவிடுவார்கள் என்பதற்கு இந்தப் பயணமும் ஓர் உதாரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான மற்றும் பக்தி சார்ந்த களத்துடன் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை அழகாக இணைந்திருப்பதாகவும் பிரியா பவானி சங்கர் பாராட்டியுள்ளார். இப்படத்தின் கதாபாத்திரங்களையும், அதில் தாங்கள் வெளிப்படுத்திய உணர்வுகளையும் ரசிகர்கள் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
