அக்டோபர் 2-ல் வெளியாகும் ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’!

இயக்குநராக தனது முதல் படைப்பை உருவாக்கியுள்ள ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷனை கதாநாயகனாக வைத்து ‘சிக்மா’ படத்தை இயக்கியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

திரைப்படத் தயாரிப்பு குறித்த படிப்பை கனடாவின் டொராண்டோ பிலிம் ஸ்கூலில் முடித்த ஜேசன் சஞ்சய், பின்னர் லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படிப்பையும் பயின்றுள்ளார். இதற்கு முன்பு சில குறும்படங்களை இயக்கிய அனுபவமும் அவருக்கு உள்ளது. மேலும், ‘சிக்மா’ படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலில் ஜேசன் சஞ்சய் மற்றும் கேத்தரின் தெரசா இணைந்து நடனமாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டது.

ரசிகர்களிடம் ஏற்கெனவே வரவேற்பைப் பெற்ற ‘சிக்மா ஸ்டைல்’ பாடலைத் தொடர்ந்து, இரண்டாவது பாடலான ‘அய்யய்யோ அம்மாடி’யும் வெளியாகி வைரலானது. விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக ஜூலை 31-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘சிக்மா’ திரைப்படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading