டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம், காதலும் உணர்வுகளும் கலந்த கதையாக அமைந்துள்ளது.பழைய காதல் கதைகளின் மென்மையையும், இன்றைய தலைமுறைக்கு ஏற்ற நவீன திரைக்கதையையும் இணைத்து படம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தாயை இழந்து சிறுவயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த ஒரு இளைஞன், மதுவுக்கு அடிமையாக இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அவனது வாழ்க்கையில் காதல் நுழைகிறது. அந்தக் காதல் அவனை எப்படி முழுமையாக மாற்றி, இருளிலிருந்து வெளிச்சம் நோக்கி அழைத்துச் செல்கிறது என்பதே கதையின் மையமாக இருக்கிறது.
வெளியாகியுள்ள டீசரில், தனிமை, வலி, மதுப்பழக்கம் ஆகியவற்றால் சிக்கித் தவிக்கும் இளைஞனின் வாழ்க்கையில் காதல் ஏற்படுத்தும் மாற்றம் உணர்வுபூர்வமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. காதலின் மென்மையையும் வாழ்க்கையின் வேதனையையும் சமநிலையுடன் காட்டியிருக்கும் இந்த டீசர், சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
