‘கே.ஜி.எப்’ மற்றும் ‘கே.ஜி.எப் 2’ படங்களின் மூலம் இந்திய அளவில் பெரும் நட்சத்திரமாக உயர்ந்த நடிகர் யாஷ், தற்போது கீது மோகன்தாஸ் இயக்கும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கேங்ஸ்டர் டிராமா பாணியில் உருவாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான ‘கே.ஜி.எப்’ படங்கள் வசூலில் சாதனை படைத்ததோடு, யாஷுக்கு நாடு முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கின. ‘டாக்ஸிக்’ படத்திற்குப் பிறகு, நிதேஷ் திவாரி இயக்கும் ‘ராமாயணா’ திரைப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார்.
சமீபத்திய பேட்டியில் தனது திரைப்பட ரசனை குறித்து பேசிய யாஷ், “எனக்கு ஹாரர் படங்களை பார்ப்பது பிடிக்காது. தியேட்டருக்கு சென்று பயப்பட விரும்புவதில்லை. சில நேரங்களில் பேய் படங்கள் பயத்தை விட வேடிக்கையாகவே தோன்றும்” என்று கூறினார். அதே நேரத்தில், “வலுவான கதையும் கதாபாத்திரமும் இருந்தால் ஹாரர் படங்களில் நடிக்க எந்த தயக்கமும் இல்லை. ஆனால் ஆக்ஷன் படங்கள்தான் எனது எப்போதும் பிடித்த ஜானர்” என்றும் தெரிவித்துள்ளார். இந்த கருத்து ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
