‘தசரா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவுடன் நானி மீண்டும் இணைந்துள்ள படம் ‘தி பாரடைஸ்’. இது நானியின் 33-வது திரைப்படமாக உருவாகி வருகிறது. எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், ‘தசரா’ போலவே முற்றிலும் வித்தியாசமான தோற்றத்திலும் கதாபாத்திரத்திலும் நானி நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ‘சரிபோத சனிவாரம்’ மற்றும் ‘ஹிட் 3’ ஆகிய படங்கள் ரூ.100 கோடியைத் தாண்டிய வசூல் சாதனை படைத்ததால், நானியின் புதிய படங்களின் பட்ஜெட்டும் கணிசமாக உயர்ந்துள்ளது.அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனம் ஆட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தசரா’ படத்தில் நானி – கீர்த்தி சுரேஷ் கூட்டணி பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, படத்தின் ‘ஆயா சேர்’ பாடல் யூடியூபில் 20 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இந்தப் பாடலை அதுல்லா ஜாங்கிரெட்டி மற்றும் அர்ஜுன் சாண்டி பாடியுள்ளனர். தற்போது, ‘தி பாரடைஸ்’ டீசர் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
