‘வதந்தி’ வெப் சீரிஸின் இரண்டாவது சீசன் வருகிற ஆகஸ்ட் 7-ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகளவில் வெளியாகிறது. இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தொடரில் இடம்பெற்றுள்ள ‘டைவா கோட்டிங்’ என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
முதல் சீசனை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸே, இந்தப் பாகத்தையும் எழுதி இயக்கியுள்ளார். புஷ்கர் – காயத்ரி தங்களது வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.
முதல் சீசனில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்த நிலையில், இந்த முறை சசிகுமார் சப்-இன்ஸ்பெக்டர் மூசா ராசா என்ற காவலர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் அபர்னா தாஸ், விவேக் பிரசன்னா, யஷ்வந்த், அனகா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையை சைமன் கே.கிங் அமைத்துள்ளார்.மதுரையை பின்னணியாகக் கொண்ட இந்த க்ரைம்-த்ரில்லர் தொடர் அரசியல், வதந்தி மற்றும் பல எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 8 அத்தியாயங்களாக ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதால், ஓடிடி ரசிகர்களிடம் இந்த சீசனுக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
