தமிழ் சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திரம், கதையின் நாயகன் எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் யோகி பாபு. மலையாளத் திரையுலகிலும் அவருக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘குருவாயூர் அம்பல நடையில்’ படத்தில் நடித்திருந்த அவர், தற்போது மலையாளத்தில் உருவாகும் ‘ஹரிவராசனம்’ படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், மலையாளத்தில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக அறியப்படும் அஜூ வர்கீஸ், தமிழில் யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கவுள்ளார். ஏற்கனவே ‘பறந்து போ’ படத்தில் அஞ்சலியின் கணவராகவும், பிரபுதேவா நடித்துள்ள ‘மூன் வாக்கு’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
யோகி பாபு, அஜூ வர்கீஸ் இணையும் இப்படத்தை ஜோஜூ ஆலுக்காஸ் இயக்குகிறார். இவர் 2019ஆம் ஆண்டு மோகன்லால், ராதிகா நடிப்பில் வெளியான ‘இட்டிமானி மேட் இன் சைனா’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். இப்படத்தின் படப்பிடிப்பு 2027 ஜனவரியில் தொடங்கவுள்ளது. கஞ்சிக்கோடு, பொள்ளாச்சி, சென்னை, மலேசியா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
