தமிழில் பிக்பாஸ் முகேன், தன்யா ஹோப், ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ள ‘நிறம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. கிருஷ்ண பலராம் இயக்கும் இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
இந்த விழாவில் பேசிய இமான், பல ஆண்டுகளுக்கு முன்பு இசை நிகழ்ச்சியில் சிறுமியாக பாடிய பிரவஸ்திக்கு இந்தப் படத்தில் பாட வாய்ப்பு கொடுத்ததாக தெரிவித்தார். மேலும், தேசிய விருது குறித்து பேசும்போது, “ஒரு படைப்புக்குக் கிடைக்கும் விருதாக மட்டும் அல்ல, அதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பையும் பயணத்தையும் மதிக்க வேண்டும்” என்றார்.
அதேபோல் தேசிய விருதுகளை தமிழர்களின் சாதனையாக பார்க்க வேண்டும் என்றும், நடுவர்களை குற்றம் சொல்வதற்குப் பதிலாக தகுதியான படங்களை போட்டிக்கு அனுப்புவது முக்கியம் என்றும் அவர் கூறினார். முகேன் தனது பேச்சில், “பிக்பாஸ் மூலம் பிரபலமான பிறகும் நான் இசை மற்றும் நடிப்பு இரண்டிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். தமிழகம் மற்றும் மலேசியா இடையே மாறி மாறி வசித்து வருகிறேன். தற்போது சில படங்களில் நடித்து வருகிறேன். சில படங்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதமாகியுள்ளன” என்று தெரிவித்தார்.
