சூர்யா மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படம் குறித்து அவர் சமீபத்திய பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், “இந்தப் படம் ஒரு சாதாரண குடும்பக் கதை அல்ல. உறவுகள், உணர்வுகள், அன்பு மற்றும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் வாழ்க்கை பற்றிய படம். கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அதிகமான ஆக்ஷன் படங்கள் வந்துள்ளன. அதற்கு மாறாக, திரையரங்கில் இருந்து வெளியே வரும் போது மனதில் ஒரு நல்ல உணர்வு இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்றார்.
மேலும், “சூர்யா சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. எந்த வகையான கதாபாத்திரமாக இருந்தாலும் அவர் அதை உயிரோட்டமாக மாற்றிவிடுவார். பெரிய நடிகருடன் பணிபுரியும் போது உழைப்பும் புத்திசாலித்தனமும் இரண்டும் தேவை. இந்தப் படத்தில் அவர் முழுமையாக வெளிப்பட்டிருப்பார்; ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன” என்றும் தெரிவித்துள்ளார். கதையை பற்றி பேசும்போது, “இது முன்னாள் சர்வதேச துப்பாக்கி சுடுபவர் சஞ்சய் விஸ்வநாத் மற்றும் அவரது குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்ட எமோஷனல் ஃபேமிலி டிராமா. பெரிய சண்டைகள் இல்லாமல், சிரிப்பும் உணர்ச்சியும் கலந்த திரைக்கதையாக உருவாக்கியுள்ளோம்” என்றார்.சூர்யாவுடன் நடந்த ஆரம்ப பேச்சுக்களை நினைவுகூர்ந்த அவர், “முதலில் ஒரு பயோபிக் மாதிரியான கதையைப் பகிர்ந்தேன். பின்னர் இந்தக் கதையை 2D ராஜசேகரிடம் சொன்னேன்; அவருக்கு மிகவும் பிடித்தது. அதன்பிறகு சூர்யாவிடம் கூறியதும் உடனே இணைந்தார். அவரது அனுபவமும் பக்குவமும் இந்தப் படத்திற்கு பெரிய பலம்” என்று கூறினார்.
மமிதா பைஜூ குறித்து, “பிரேமலு படத்தில் பார்த்த அந்த இயல்பான Innocence இந்தக் கதாபாத்திரத்திற்கே பொருத்தமாக இருந்தது. சூர்யா, ராதிகா போன்ற அனுபவமுள்ள நடிகர்களுடன் நடித்தும் மமிதா மிகவும் அழகாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார்” என்றார்.ராதிகா மற்றும் சூர்யாவின் அம்மா-மகன் காட்சிகள் படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என்றும், பல இடங்களில் வசனங்களை விட நடிகர்களின் முகபாவனைகளே அதிகம் பேசும் என்றும் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார்.
