சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகர் வி.சி. ஜெயமணி, உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவு தொலைக்காட்சி துறையிலும், ரசிகர்களிடையிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்ட ஜெயமணி, மேடை நாடகங்கள் மூலம் தனது கலைப்பயணத்தை தொடங்கினார். பின்னர் ‘திருமதி செல்வம்’ தொடரில் பூங்காவனம் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.அதனைத் தொடர்ந்து ‘மெட்டி ஒலி’, ‘கல்யாணப் பரிசு’ உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தார். சமீபத்தில் ‘சிறகடிக்க ஆசை’ தொடரிலும் அவர் நடித்திருந்தார். சின்னத்திரை மட்டுமின்றி, 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
நடிப்பைத் தாண்டி, சுமார் 40 தொடர்களுக்கு இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், நடிகர் சங்கம் மற்றும் டப்பிங் யூனியன் உறுப்பினராகவும் இருந்தார்.அவரது மனைவி மாலதி டப்பிங் கலைஞராக பணியாற்றி வருகிறார். மகள் நந்தினி ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.ஜெயமணியின் திடீர் மறைவுக்கு பல சின்னத்திரை மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
