மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் ‘மண்டாடி மண்டாடி’, ‘உசுரே நீதான் புள்ள’, ‘ஒலி வட்டம்’ உள்ளிட்ட பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றன. அதிலும் ‘மண்டாடி மண்டாடி’ பாடலில் சூரியின் நடனம் பெரிதும் பேசப்பட்டது.
ராமநாதபுரம் பகுதியின் பாரம்பரிய பாய்மரப்படகுப் போட்டியை கதையின் முக்கிய அம்சமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று திரையரங்குகளில் வெளியான ‘மண்டாடி’, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், முதல் நாளில் ரூ.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் வரவேற்பு குறித்து சூரி கூறும்போது, ‘மண்டாடி’க்காக ஒட்டுமொத்த படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி இருப்பதாக தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் முதல் இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை ஒவ்வொருவரின் உழைப்பும் இணைந்ததன் பலனாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் பல மாதங்கள் கடலில் கடுமையாக உழைத்ததாகவும், அந்த உழைப்புக்கு தற்போது பலன் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றியை கடலோர மீனவர்கள், தனது அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை என அனைவருக்கும் சமர்ப்பிப்பதாக தெரிவித்த அவர், ஒரு மீனவனாக நடித்ததை மிகப்பெரிய பாக்கியமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
