‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘சேயோன்’. ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்கி வருகிறார். தமிழ்க்கடவுள் முருகனை அடிப்படையாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருப்பதால், படத்துக்கு ‘சேயோன்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மதுரையை மையமாகக் கொண்ட பாரம்பரிய கதைக்களத்தில் உருவாகும் இப்படம், கிராமத்து பின்னணியுடன் கூடிய கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் நிறைவு பெற்றது.
அதன்பின்னர் மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதில் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமின்றி முக்கியமான குடும்பக் காட்சிகளும் படமாக்கப்பட்டன. இந்த ஷெட்யூலில் இயக்குநரும் நடிகருமான சீமான் பங்கேற்றிருந்தார். அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றன.
இந்நிலையில், மதுரையில் தொடர்ந்து நடைபெற்று வந்த ‘சேயோன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் படக்குழு சார்பில் புதிய வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
—
