நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியாவின் பல பகுதிகளில் மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அதேபோல், சென்னை தியாகராய நகரிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் பல தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இயக்குநர் வெற்றிமாறன் நேரில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “மாணவர்கள் முன்னெடுக்காத எந்தப் போராட்டமும் வெற்றி பெறாது. போராடுவது ஒவ்வொருவரின் ஜனநாயக உரிமை. நீங்கள் எடுக்கும் நியாயமான முடிவுகளுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும். அதே நேரத்தில், இந்தப் போராட்டத்தை வேறு யாரும் தங்கள் நோக்கத்திற்காக பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்” என்று வலியுறுத்தினார்.
