சூர்யா நடிப்பில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகவுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் குறித்து இயக்குநர் வெங்கி அட்லூரி பகிர்ந்த தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘வாத்தி’ படத்திற்குப் பிறகு அவர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார். 40 வயது ஆண் மற்றும் 20 வயது இளம்பெண் இடையேயான உறவை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது.
சமீபத்திய பேட்டியில் பேசிய வெங்கி அட்லூரி, இந்தக் கதையே முதலில் திட்டமிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் சூர்யாவுக்காக ஒரு வரலாற்று சுயசரிதை படத்தை உருவாக்கியிருந்ததாகவும், ஆனால் காப்புரிமை தொடர்பான சிக்கல்களால் அந்த முயற்சியை தொடர முடியாமல் போனதாகவும் அவர் கூறினார்.
மேலும், ஏற்கனவே இரண்டு பயோபிக் படங்களில் நடித்திருந்ததால், இம்முறை சற்று இலகுவான மற்றும் பொழுதுபோக்கு கதையில் நடிக்க விரும்புவதாக சூர்யா தெரிவித்ததாகவும், அதன் பிறகே ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ கதையை உருவாக்கியதாகவும் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார். கதை கேட்ட முதல் சந்திப்பிலேயே சூர்யா நடிக்க சம்மதித்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.
