‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜேசன் சஞ்சய். சந்தீப் கிஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதன் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று (செப்.9) சேலத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜேசன் சஞ்சய்யிடம் அவரது சினிமா ஆர்வம் மற்றும் இயக்குநராக உருவான பயணம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
அப்போது, திரையரங்கில் சென்று அவர் பார்த்த முதல் திரைப்படம் எது என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், விஜய் நடித்த ‘திருமலை’ படம்தான் தான் முதலில் திரையரங்கில் பார்த்த படம் என்றும், அப்போது தனக்கு மூன்று வயது என்றும் தெரிவித்தார். விஜய்யின் திரைப்படம் தொடர்பான இந்த பதிலை கேட்டதும் மாணவர்கள் உற்சாகத்தில் அரங்கையே அதிர வைத்தனர்.
இயக்குநராக வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிய திரைப்படம் குறித்த கேள்விக்கு, சற்றும் எதிர்பாராத பதிலை அவர் அளித்தார். “யாரும் என்னைத் திட்டாதீர்கள். பிரேசிலியன் திரைப்படமான ‘City Of God’ படத்தை சிறுவயதில் பார்த்தேன். அந்தப் படம்தான் எனக்குள் இயக்குநராக வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்கியது” என்று கூறினார். மேலும், தனது முதல் குறும்படம் பற்றியும் ஜேசன் சஞ்சய் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார். 2022-ம் ஆண்டு ‘Pull the Trigger’ என்ற குறும்படத்தை இயக்கியதாக அவர் தெரிவித்தார்.
—
